பெரியபுராணம், பட்ட மரம்

பெரியபுராணம்

– சேக்கிழார்

வரப்புயர நீர் உயரும் : நீருயர நெல் உயரும் : நெல்லுயரக் குடி உயரும் . உயர்ந்த குடியாக , நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது . காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது பெரியபுராணம் : வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற் கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது .

திருநாட்டுச் சிறப்பு

மாவி ரைத்தெழுந் தார்ப்ப வரைதரு

பூவி ரித்த புதுமதுப் பொங்கிட

வாவி யிற்பொலி நாடு வளந்தரக்

காவி ரிப்புனல் கால்பரந் தோங்குமால் ( பா.எ .59 )

பாடலின் பொருள்

காவிரிநீர் மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக்கொண்டு வருகிறது . அப்பூக்களில் தேன் நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன . நீர்நிலைகள் நிறைந்த நாட்டுக்கு வளத்தைத் தரும் பொருட்டுக் காவிரி நீர் கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது .

சொல்லும் பொருளும் :

மா – வண்டு ;

மது – தேன் :

வாவி – பொய்கை .

மண்டுபுனல் பரந்தவயல் வளர்முதலின் சுருள்விரியக்

கண்டுழவர் பதங்காட்ட களைகளையுங் கடைசியர்கள்

தண்டரளஞ் சொரிபணிலம் இடறியிடை தளர்ந்தசைவார்

வண்டலையும் குழல்அலைய மடநடையின் வரம்பணைவார் ( பா.எ .63 )

பாடலின் பொருள்

நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது . அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களைபறிக்கும் பருவம் என்றனர் . அவ்வாறே களைகளைக் களைந்து செல்லும் உழத்தியரின் கால்களில் குளிர்ந்த முத்துகளை ஈனும் சங்குகள் இடறின . அதனால் , இடை தளர்ந்து வண்டுகள் மொய்க்கும் கூந்தல் அசையுமாறு மென்மையாக நடந்து அருகில் உள்ள வரப்பினை அடைவர்

சொல்லும் பொருளும் :

வளர் முதல் – நெற்பயிர் :

தரளம் – முத்து ;

பணிலம் – சங்கு ;

வரம்பு – வரப்பு .

காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு

மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை

கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன

நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் ” ( பா.எ .67 )

பாடலின் பொருள்

காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள் உள்ளன . சோலைகள் எங்கும் குழைகளில் ( செடிகளின் புதிய கிளைகளில் , புதிய தளிர்களில் ) மலர் அரும்புகள் உள்ளன . பக்கங்களில் எங்கும் கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன . வயல்களில் எங்கும் நெருக்கமாகச் சங்குகள் கிடக்கின்றன . நீர்நிலையின் கரையெங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன . குளங்கள் எல்லாம் கடலைப்போன்ற பரப்பை உடையன . அதனால் , நாடு முழுதும் நீர்நாடு என்று சொல்லத்தக்கதாய் உள்ளது . இத்தகைய சிறப்புடைய சோழநாட்டிற்குப் பிற நாடுகள் ஈடாக மாட்டா .

சொல்லும் பொருளும் :

கழை – கரும்பு :

கா – சோலை :

குழை – சிறு கிளை :

அரும்பு – மலர் மொட்டு :

மாடு – பக்கம் :

நெருங்கு வளை – நெருங்குகின்ற சங்குகள் :

கோடு – குளக்கரை .

அன்னம் ஆடும் அகன்துறைப் பொய்கையில்

துன்னும் மேதி படியத் துதைந்தெழும்

கன்னி வாளை கமுகின்மேற் பாய்வன

மன்னு வான்மிசை வானவில் போலுமால் ( பா.எ .69 )

பாடலின் பொருள்

அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும் . அதனால் , அந்நீர்நிலைகளில் உள்ள வாளை மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது பாயும் . இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும் .

சொல்லும் பொருளும் :

ஆடும் – நீராடும் :

மேதி – எருமை ;

துதைந்து எழும் – கலக்கி எழும் ;

கன்னி வாளை – இளமையான வாளைமீன் .

அரிதரு செந்நெற் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார்

பரிவுறத் தடிந்த பன்மீன் படர்நெடுங் குன்று செய்வார்

சுரிவளை சொரிந்த முத்தின் சுடர்ப்பெரும் பொருப்பு யாப்பார்

விரிமலர்க் கற்றை வேரி பொழிந்திழி வெற்பு வைப்பார் ( பா.எ .73 )

பாடலின் பொருள்

அரியப்பட்ட செந்நெற்கட்டுகளை அடுக்கிப் பெரிய போராகக் குவிப்பர் . மிகுதியாகப் பிடிக்கப்பட்ட பலவகை மீன்களையும் நீண்ட குன்றைப்போல் குவிப்பர் வளைந்த சங்குகள் ஈன்ற முத்துகளையும் குன்றைப்போல் உயர்த்திக் கூட்டுவர் . தேன்வடியும் விரிந்த மலர்த்தொகுதியை மலைபோல் குவித்து வைப்பர் .

சொல்லும் பொருளும் :

சூடு – நெல் அரிக்கட்டு :

சுரிவளை – சங்கு ;

வேரி – தேன் .

சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்

காலிரும் பகடு போக்கும் கரும்பெரும் பாண்டில் ஈட்டம்

ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்

போல்வலங் கொண்டு குழும் காட்சியின் மிக்க தன்றே . ( பா.எ .74 )

பாடலின் பொருள்

நெல்கற்றைகள் குவிந்த பெரிய மலைபோன்ற போரை மேலேயிருந்து சாயச் செய்வர் . பெரிய வண்டிகளைச் செலுத்தும் கருமையான எருமைக்கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும் . இத்தோற்றமானது கரிய மேகங்கள் பெரிய பொன்மலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற காட்சிபோல உள்ளது . இத்தகைய காட்சிகள் அங்கு மிகுதியாகத் தோன்றும்.

சொல்லும் பொருளும் :

பகடு – எருமைக்கடா :

பாண்டில் – வட்டம் :

சிமயம் – மலையுச்சி .

நாளிகே ரஞ்செ ருந்தி நறுமலர் நரந்தம் எங்கும்

கோளிசா லந்த மாலம் குளிர்மலர்க் குரவம் எங்கும்

தாளிரும் போந்து சந்து தண்மலர் நாகம் எங்கும்

நீளிலை வஞ்சி காஞ்சி நிறைமலர்க் கோங்கம் எங்கும் . ( பா.எ .78 )

பாடலின் பொருள்

அந்நாட்டில் எங்கும் தென்னை , செருந்தி , நறுமணமுடைய நரந்தம் போன்றவை உள்ளன . அரச மரம் , கடம்ப மரம் , பச்சிலை மரம் , குளிர்ந்த மலரையுடைய குரா மரம் போன்றவை எங்கும் வளர்ந்துள்ளன . பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை , சந்தனம் , குளிர்ந்த மலரையுடைய நாகம் , நீண்ட இலைகளையுடைய வஞ்சி , காஞ்சி , மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன .

சொல்லும் பொருளும் :

நாளிகேரம் – தென்னை :

நரந்தம் – நாரத்தை :

கோளி – அரசமரம் ;

சாலம் –ஆச்சா மரம் :

தமாலம் – பச்சிலை மரம் :

இரும்போந்து – பருத்த பனைமரம் :

சந்து – சந்தன மரம் :

நாகம் – நாகமரம் :

காஞ்சி – ஆற்றுப்பூவரசு

இலக்கணக்குறிப்பு

கருங்குவளை , செந்நெல் – பண்புத் தொகைகள் .

விரிமலர் – வினைத்தொகை

தடவரை – உரிச்சொல் தொடர்

பகுபத உறுப்பிலக்கணம்

பாய்வன – பாய் + வ் + அன் + அ

பாய் – பகுதி

வ் – எதிர்கால இடைநிலை ,

அன் – சாரியை

அ – பலவின்பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

சுந்தரரின் திருத்தொண்டத் தொகை அடியவர் பெருமையைக் கூறுகிறது . இதைச் சிறிது விரித்து நம்பியாண்டார்நம்பியால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி ஒவ்வொரு பாடலிலும் அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ளது . இந்த இரண்டு நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு சேக்கிழாரால் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வோர் அடியாராக அறுபத்துமூவரின் சிறப்புகளை விளக்கிப் பாடப்பட்டது திருத்தொண்டர் புராணம் . இதன் பெருமை காரணமாக இது பெரியபுராணம் என்று அழைக்கப்படுகிறது . கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் , சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தார் . ‘ பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ ‘ என்று இவரை மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் பாராட்டுகிறார் .

வானகமே , இளவெயிலே , மரச்செறிவே , நீங்களெல்லாம்

கானலின் நீரோ ? – வெறுங் காட்சிப் பிழைதானோ ?

போன தெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே

போனதனால் நானும்ஓர் கனவோ ? – இந்த

ஞாலமும் பொய்தானோ ?

– பாரதியார்

பட்ட மரம்

-கவிஞர் தமிழ்ஒளி

நம் முன்னோரின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது . அவர்கள் மரம் , செடி , கொடிகளையும் போற்றிக்காத்தனர் . கால மாற்றத்தில் இவ்வாழ்வு சிறிது சிறிதாக மறைந்துகொண்டே வருகிறது . மரம் என்பது மனித வாழ்வில் மிகவும் இன்றியமையாதது . மரங்கள் இல்லை என்றால் நமக்கு உயிர்வளி கிடைக்காமல் போய்விடும் . அவ்வகையில் பட்டுப்போன மரமொன்று கவிஞர் ஒருவரின் உள்ளத்தில் ஏற்படுத்திய குமுறலை வெளிப்படுத்தும் இக்கவிதை , மரங்களை வளர்த்துப் பேணிக் காத்திட வேண்டும் என்ற உணர்வை நமக்கு ஏற்படுத்துகிறது .

மொட்டைக் கிளையொடு

நின்று தினம்பெரு

மூச்சு விடும்மரமே !

வெட்டப் படும் ஒரு

நாள்வரு மென்று

விசனம் அடைந்தனையோ ?

குந்த நிழல்தரக்

கந்த மலர்தரக்

கூரை விரித்தஇலை !

வெந்து கருகிட

இந்த நிறம்வர

வெம்பிக் குமைந்தனையோ ?

கட்டை யெனும்பெயர்

உற்றுக் கொடுந்துயர்

பட்டுக் கருகினையே !

பட்டை யெனும்உடை

இற்றுக் கிழிந்தெழில்

முற்றும் இழந்தனையே !

காலம் எனும்புயல்

சீறி எதிர்க்கக்

கலங்கும் ஒருமனிதன்

ஓலமி டக்கரம்

நீட்டிய போல்இடர்

எய்தி உழன்றனையே !

பாடும் பறவைகள்

கூடி உனக்கொரு

பாடல் புனைந்ததுவும்

மூடு பனித்திரை

யூடு புவிக்கொரு

மோகங் கொடுத்ததுவும்

ஆடுங் கிளைமிசை

ஏறிச் சிறுவர்

குதிரை விடுத்ததுவும்

எடு தருங்கதை

யாக முடிந்தன !

இன்று வெறுங்கனவே

இலக்கணக்குறிப்பு

வெந்து , வெம்பி , எய்தி – வினையெச்சங்கள்

மூடுபனி – வினைத்தொகை ,

ஆடுங்கிளை – பெயரெச்சத் தொடர்

சொல்லும் பொருளும்

குந்த – உட்கார ,

கந்தம் – மணம்

மிசை – மேல் ,

விசனம் – கவலை

பகுபத உறுப்பிலக்கணம்

விரித்த – விரி + த் + த் + அ

விரி – பகுதி

த் – சந்தி

த் – இறந்தகால இடைநிலை

அ – பெயரெச்ச விகுதி

குமைந்தனை – குமை + த் ( ந் ) + த் + அன் + ஐ

குமை – பகுதி

த் – சந்தி . த் – ந் ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை ,

அன் – சாரியை

ஐ – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

நூல் வெளி

கவிஞர் தமிழ்ஒளி ( 1924-1965 ) புதுவையில் பிறந்தவர் . பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் : மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர் . நிலைபெற்ற சிலை , வீராயி , கவிஞனின் காதல் , மே தினமே வருக , கண்ணப்பன் கிளிகள் , குருவிப்பட்டி , தமிழர் சமுதாயம் , மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை . இப்பாடப்பகுதி தமிழ் ஒளியின் கவிதைகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது .

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: