புறநானூறு, மணிமேகலை

புறநானூறு

– குடபுலவியனார்

நிலம் , நீர் , காற்று என்பவை மனிதனின் அடிப்படைத் தேவைகளாகும் . இயற்கை நமக்குக் கொடையாகத் தந்திருக்கும் இவற்றை உரிய முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும் . நீரின் இன்றியமையாமையை உணர்ந்த நம் முன்னோர்கள் , நீர்நிலைகளை உருவாக்குபவர்களை ” உயிரை உருவாக்குபவர்கள் ” என்று போற்றினர் .

வான் உட்கும் வடிநீண் மதில் ,

மல்லல் மூதூர் வய வேந்தே !

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்

ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ,

ஒருநீ ஆகல் வேண்டினும் , சிறந்த

நல்லிசை நிறுத்தல் வேண்டினும் , மற்றுஅதன்

தகுதி கேள்இனி மிகுதி ஆள !

நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே !

உண்டி முதற்றே உணவின் பிண்டம் ;

உணவெனப் படுவது நிலத்தொடு

நீரே ; நீரும் நிலமும் புணரியோர் , ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே ! *

வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்

வைப்பிற்று ஆயினும் , நண்ணி ஆளும்

இறைவன் தாட்கு உதவாதே ! அதனால்

அடுபோர்ச் செழிய ! இகழாது வல்லே :

நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோர் அம்ம ! இவண் தட்டோரே !

தள்ளாதோர் இவண் தள்ளா தோரே !

( புறம் 18 : 11-30 )

( பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது )

திணை : பொதுவியல் துறை : முதுமொழிக்காஞ்சி

விண்ணை முட்டும் திண்ணிய நெடுமதில்

வளமை நாட்டின் வலிய மன்னவா

போகும் இடத்திற்குப் பொருள்

உலகம் வெல்லும் ஒரு தனி ஆட்சி

வாடாத புகழ் மாலை வரவேண்டுமென்றால்

தகுதிகள் இவைதாம் தவறாது தெரிந்துகொள்

உணவால் ஆனது உடல்

நீரால் ஆனது உணவு

உணவு என்பது நிலமும் நீரும்

நீரையும் நிலத்தையும் இணைத்தவர்

உடலையும் உயிரையும் படைத்தவர்

புல்லிய நிலத்தின் நெஞ்சம் குளிர

வான் இரங்கவில்லையேல்

யார் ஆண்டு என்ன

அதனால் எனது சொல் இகழாது

நீர்வளம் பெருக்கி நிலவளம் விரிக்கப்

பெற்றோர் நீடுபுகழ் இன்பம் பெற்றோர்

நீணிலத்தில் மற்றவர் இருந்தும் இறந்தும்

கெட்டோர் மண்ணுக்குப் பாரமாய்க் கெட்டோர்

பொதுவியல் திணை

வெட்சி முதலிய புறத்திணைகளுக் கெல்லாம் பொதுவான செய்திகளையும் முன்னர் விளக்கப்படாத செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும் .

முதுமொழிக்காஞ்சித் துறை

அறம் , பொருள் , இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல் .

சொல்லும் பொருளும்

யாக்கை – உடம்பு ,

புணரியோர் – தந்தவர் ,

புன்புலம் – புல்லிய நிலம் ,

தாட்கு – முயற்சி ,ஆளுமை ;

 தள்ளாதோர் இவண் தள்ளாதோரே – குறைவில்லாது நீர் நிலை அமைப்பவர்கள் குறைவில்லாது புகழுடையவர்களாக விளங்குவார்கள் .

பாடலின் பொருள்

வான்வரை உயர்ந்த மதிலைக் கொண்ட பழைமையான ஊரின் தலைவனே ! வலிமை மிக்க வேந்தனே ! நீ மறுமை இன்பத்தை அடைய விரும்பினாலோ உலகு முழுவதையும் வெல்ல விரும்பினாலோ நிலையான புகழைப் பெற விரும்பினாலோ செய்ய வேண்டியன என்னவென்று கூறுகிறேன் . கேட்பாயாக !

உலகில் உள்ள யாவற்றையும் மிகுதியாகக் கொண்டு விளங்கும் பாண்டிய நெடுஞ்செழியனே ! நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது ; உணவையே முதன்மையாகவும் உடையது . எனவே உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர் .

உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும் . நிலத்தையும் நீரையும் ஒன்று சேர்த்தவர் இவ்வுலகில் உடலையும் உயிரையும் ஒன்று சேர்த்தவர் . நெல் முதலிய தானியங்களை விதைத்து மழையைப் பார்த்திருக்கும் பரந்த நிலமாயினும் அதனைச் சார்ந்து ஆளும் அரசனின் முயற்சிக்குச் சிறிதும் உதவாது . அதனால் , நான் கூறிய மொழிகளை இகழாது விரைவாகக் கடைப்பிடிப்பாயாக .

நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலையைப் பெருகச் செய்தல் வேண்டும் . அவ்வாறு நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும் நிலைத்த புகழையும் பெறுவர் . இதைச் செய்யாதவர் புகழ் பெறாது வீணே மடிவர் .

இலக்கணக்குறிப்பு

மூதூர் , நல்லிசை , புன்புலம் – பண்புத்தொகைகள் ;

நிறுத்தல் – தொழிற்பெயர் ;

அமையா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் .

நீரும் நிலமும் , உடம்பும் உயிரும் – எண்ணும்மைகள் :

அடுபோர் – வினைத்தொகை .

கொடுத்தோர் – வினையாலணையும் பெயர் .

பகுபத உறுப்பிலக்கணம்

நிறுத்தல் – நிறு + த் + தல்

நிறு – பகுதி

த் – சந்தி

தல் – தொழிற்பெயர் விகுதி

கொடுத்தோர் – கொடு + த் + த் + ஓர்

கொடு – பகுதி

த் – சந்தி

த் – இறந்தகால இடைநிலை

ஓர் – பலர்பால் வினைமுற்று விகுதி

நூல்வெளி

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு . இது பண்டைய வேந்தர்களின் வீரம் , வெற்றி , கொடை குறித்தும் குறுநில மன்னர்கள் , புலவர்கள் , சான்றோர்கள் உள்ளிட்டவர்களின் பெருமைகளைப் பற்றியும் அன்றைய மக்களின் புறவாழ்க்கையைப் பற்றியும் கூறுகிறது . இந்நூல் பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழ்கிறது .

குளம் தொட்டுக் கோடு பதித்து வழிசீத்து

உளம் தொட்டு உழுவயல் ஆக்கி – வளம் தொட்டுப்

பாகுபடும் கிணற்றோடு என்று இவ்வைம் பாற்படுத்தான்

ஏகும் சொர்க்கத்து இனிது

– சிறுபஞ்சமூலம் 64

அ ) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே ! ( புறம் – 18 )

ஆ ) உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! ( புறம் 189 )

இ ) யாதும் ஊரே யாவரும் கேளிர் ! ( புறம் -192 )

ஈ ) சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே ! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! ( புறம் 312 )

உ ) உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் . பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! ( புறம் – 183 ).

மணிமேகலை

– சீத்தலைச் சாத்தனார்

மக்களின் வாழ்வில் பிறந்தது முதலாக நடத்தப்படுகின்ற நிகழ்வுகளில் விழா , தனக்கென ஒரு தனியிடம் பெறுகிறது . மனித மாண்புகளை எடுத்துரைக்கும் விழா , பண்பாட்டின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது . அல்லும் பகலும் உழைப்பில் திளைக்கின்ற மக்களை உற்சாகப்படுத்தி ஓய்வு தரும் வாயில் விழாதான் . அவ்வகையில் புகார் நகரோடு அதிகம் தொடர்புடையதாகத் திகழ்ந்த இந்திரவிழா சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் விவரிக்கப்படுகிறது . அவ்விழா நிகழ்வுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்துவதாய் அமைகிறது மணிமேகலையின் விழாவறை காதை .

விழாவறை காதை

மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும்

இத்திறம் தத்தம் இயல்பினிற் காட்டும்

சமயக் கணக்கரும் தந்துறை போகிய

அமயக் கணக்கரும் அகலா ராகிக்

கரந்துரு எய்திய கடவு ளாளரும்

பரந்தொருங்கு ஈண்டிய பாடை மாக்களும்

ஐம்பெருங் குழுவும் எண்பேர் ஆயமும்

வந்தொருங்கு குழீஇ வான்பதி தன்னுள்

( அடிகள் 11-18 )

தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின் ;

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்

பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின் ;

பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து

முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின் ;

விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்

பழமணல் மாற்றுமின் ; புதுமணல் பரப்புமின் ;

கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்

மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின் ;

( அடிகள் 43-53 )

தண்மணற் பந்தரும் தாழ்தரு பொதியிலும்

புண்ணிய நல்லுரை அறிவீர் பொருந்துமின் ;

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்

பட்டிமண் டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் ;

பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்

செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின் ;

வெண்மணற் குன்றமும் விரிபூஞ் சோலையும்

தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்

தேவரும் மக்களும் ஒத்துடன் திரிதரும்

நாலேழ் நாளினும் நன்கறிந்தீர் என –

ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்

களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பி

பசியும் பிணியும் பகையும் நீங்கி

வசியும் வளனும் சுரக்க ! என வாழ்த்தி ;

அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென் .

( அடிகள் 58-72 )

சொல்லும் பொருளும்

சமயக் கணக்கர் –சமயத் தத்துவவாதிகள் ,

பாடைமாக்கள் – பல மொழிபேசும் மக்கள் ,

குழீஇ – ஒன்றுகூடி ,

தோம் – குற்றம் ,

கோட்டி – மன்றம் ,

பொலம் – பொன் ,

வேதிகை – திண்ணை ,

தூணம் – தூண் ,

தாமம் – மாலை ,

கதலிகைக் கொடி –சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது ,

காழூன்று கொடி –கொம்புகளில் கட்டும் கொடி ,

விலோதம் – துணியாலான

கொடி , வசி- மழை ,

செற்றம் – சினம் ,

கலாம் – போர் ,

துருத்தி- ஆற்றிடைக்குறை

( ஆற்றின் நடுவே இருக்கும் மணல்திட்டு ) .

பாடலின் பொருள்

இந்திர விழாவைக் காண வந்தோர்

உயர்வுடைய புகார் நகரில் மெய்ப்பொருள் உணர்த்தும் உலகியல் . தத்துவம் , வீடுபேறு ஆகிய பொருள்களை அவரவர் இயற்கைத் தன்மைக்கு ஏற்ப விளக்குபவராகிய சமயவாதிகள் கூடியிருக்கின்றனர் . தமது நெறியில் சிறந்தவராக விளங்கும் காலத்தைக் கணக்கிட்டுச் சொல்லும் காலக்கணிதரும் கூடியிருக்கின்றனர் . இந்நகரை விட்டு நீங்காதவராய்த் தம் தேவருடலை மறைத்து மக்கள் உருவில் வந்திருக்கும் கடவுளரும் கடல்வழி வாணிகம் செய்து பெரும் செல்வம் காரணமாய்ப் புகார் நகரில் ஒன்று திரண்டிருக்கும் பல மொழி பேசும் அயல் நாட்டினரும் குழுமியிருக்கின்றனர் . அரசர்க்குரிய அமைச்சர் குழுவாகிய ஐம்பெருங்குழு , எண்பேராயத்தைச் சேர்ந்தவர்களும் அரசவையில் ஒன்று திரண்டிருக்கின்றனர் .

விழா முன்னேற்பாடுகள் பற்றி அறிவித்தல்

” தோரணம் கட்டிய தெருக்களிலும் குற்றமில்லாத மன்றங்களிலும் பூரணகும்பம் , பொற்பாலிகை , பாவை விளக்கு மற்றும் பலவகையான மங்கலப் பொருள்களை முறையாக அழகுபடுத்தி வையுங்கள் . குலை முற்றிய பாக்கு மரத்தையும் வாழை மரத்தையும் வஞ்சிக்கொடியையும் பூங்கொடிகளையும் கரும்பையும் நட்டு வையுங்கள் . வீடுகளின்முன் தெருத் திண்ணையில் வரிசை வரிசையாக இருக்கும் தங்கத் தூண்களிலே முத்து மாலைகளைத் தொங்கவிடுங்கள் .

விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் . துகில் கொடிகளையும் கம்புகளில் கட்டிய கொடிகளையும் பெரிய மாடங்களிலும் மாடங்களின் வாயில்களிலும் சேர்த்துக் கட்டுங்கள் .

பட்டிமண்டபம் ஏறுமின்

குளிர்ந்த மணல் பரப்பிய பந்தல்களிலும் மரங்கள் தாழ்ந்து நிழல்தரும் ஊர் மன்றங்களிலும் நல்லன பற்றிச் சொற்பொழிவாற்றுங்கள் . அவரவர் சமயத்திற்கு உரிய உட்பொருளறிந்து வாதிடுவோர் பட்டிமண்டப முறைகளைத் தெரிந்து வாதிட்டுத் தீர்வு காணுங்கள் .

சினமும் பூசலும் கைவிடுக

மாறுபாடு கொண்ட பகைவர்களிடம் கூடக் கோபமும் பூசலும் கொள்ளாது அவர்களைவிட்டு விலகி நில்லுங்கள் . வெண்மையான மணல் குன்றுகளிலும் மலர் செறிந்த பூஞ்சோலைகளிலும் குளிர்ந்த ஆற்றிடைக்குறைகளிலும் மரக்கிளைகள் நிழல் தரும் தண்ணீர்த் துறைகளிலும் விழா நடைபெறும் . அந்த இருபத்தெட்டு நாள்களிலும் தேவரும் மக்களும் ஒன்றுபட்டு மகிழ்வுடன் உலாவிவருவர் என்பதை நன்கு அறியுங்கள் . “

வாழ்த்தி அறிவித்தல்

ஒளிவீசும் வாளேந்திய காலாட் படையினரும் தேர்ப்படையினரும் குதிரைப் படையினரும் யானைப் படையினரும் சூழ்ந்து வர , அகன்ற முரசினை அறைந்து , ” பசியும் நோயும் பகையும் நீங்கி மழையும் வளமும் எங்கும் பெருகுவதாகுக ” என வாழ்த்தி மேற்கண்ட செய்திகளை நகருக்கு முரசறைவோன் அறிவித்தான் .

ஐம்பெருங்குழு

1. அமைச்சர்

2. சடங்கு செய்விப்போர்

3. படைத்தலைவர்

4. தூதர்

5. சாரணர் ( ஒற்றர் )

எண்பேராயம்

1. கரணத்தியலவர்

2. கரும விதிகள்

3. கனகச்சுற்றம்

4. கடைக்காப்பாளர்

5. நகரமாந்தர்

6. படைத்தலைவர்

7 . யானை வீரர்

8. இவுளி மறவர்

இலக்கணக் குறிப்பு

தோரணவீதியும் , தோமறு கோட்டியும் – எண்ணும்மைகள்

காய்க்குலைக் கமுகு , பூக்கொடி வல்லி , முத்துத்தாமம் – இரண்டாம் வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கத் தொகைகள்

மாற்றுமின் , பரப்புமின் – ஏவல் வினைமுற்றுகள்

உறுபொருள் – உரிச்சொல்தொடர்

தாழ்பூந்துறை – வினைத்தொகை

பாங்கறிந்து – இரண்டாம் வேற்றுமைத்தொகை

நன்பொருள் . தண்மணல் , நல்லுரை – பண்புத்தொகைகள்

பகுபத உறுப்பிலக்கணம்

பரப்புமின் – பரப்பு + மின்

பரப்பு – பகுதி

மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி

அறைந்தனன் – அறை + த் ( ந் ) + த் + அன் + அன்

அறை – பகுதி

த் – சந்தி ,

த் – ந் ஆனது விகாரம்

த் – இறந்தகால இடைநிலை

அன் – சாரியை

அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

நூல் வெளி

தொடர்நிலைச் செய்யுள் வரிசையில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம் , மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன . மணிமேகலை , ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று . மணிமேகலையின் துறவு வாழ்க்கையைக் கூறுவதால் , இந்நூலுக்கு மணிமேகலைத் துறவு என்னும் வேறு பெயரும் உண்டு . இது பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம் ; பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம் . இக்காப்பியம் சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது ; பௌத்த சமயச் சார்புடையது . கதை அடிப்படையில்மணிமேகலையைச் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியெனக் கூறுவர் . முப்பது காதைகளாக அமைந்துள்ள மணிமேகலையின் முதல் காதையே விழாவறை காதை .

மணிமேகலைக் காப்பியத்தை இயற்றியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் . சாத்தன் என்பது இவரது இயற்பெயர் . இவர் , திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தவர் என்று கூறுவர் . கூலவாணிகம் ( கூலம் – தானியம் ) செய்தவர் . இக்காரணங்களால் இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்று அழைக்கப்பெற்றார் . சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவர் என்பர் . தண்டமிழ் ஆசான் , சாத்தன் , நன்னூற்புலவன் என்று இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார் .

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள் ! மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல் .

( மணிமேகலை 25 : 228 -231 )

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: