கண்மணியே கண்ணுறங்கு, நானிலம் படைத்தவன், கடலோடு விளையாடு

கண்மணியே கண்ணுறங்கு

பாடல்கள் மனத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் தருபவை . பாடலைப் பாடினாலும் மகிழ்ச்சி : கேட்டாலும் மகிழ்ச்சி . ஏட்டில் எழுதப்படாத இசைப்பாடல்கள் தமிழில் ஏராளமாக உள்ளன . தமிழரின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிகழ்விலும் பாடல்கள் முதன்மையான இடத்தைப் பெறுகின்றன . இந்நாட்டுப்புறப் பாடல்களே தமிழர்களின் வாழ்க்கை முறைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றன .

ஆராரோ ஆரிரரோ

ஆராரோ ஆரிரரோ

நந்தவனம் கண் திறந்து

நற்றமிழ்ப் பூ எடுத்து

பண்ணோடு பாட்டிசைத்துப்

பார் போற்ற வந்தாயோ !

தந்தத்திலே தொட்டில் கட்டித்

தங்கத்திலே பூ இழைத்துச்

செல்லமாய் வந்து உதித்த

சேரநாட்டு முத்தேனோ !

வாழை இலை பரப்பி

வந்தாரைக் கை அமர்த்திச்

சுவையான விருந்து வைக்கும்

சோழநாட்டு முக்கனியோ !

குளிக்கக் குளம் வெட்டிக்

குலம்வாழ அணை கட்டிப்

பசியைப் போக்க வந்த

பாண்டிநாட்டு முத்தமிழோ !

கண்ணே கண்மணியே

கண்ணுறங்கு கண்ணுறங்கு !

சொல்லும் பொருளும்

நந்தவனம்- பூஞ்சோலை

பார் – உலகம்

பண் – இசை

இழைத்து – பதித்து

தொகைச்சொற்களின் விளக்கம்

முத்தேன் – கொம்புத்தேன் , மலைத்தேன் , கொசுத்தேன்

முக்கனி – மா , பலா , வாழை

முத்தமிழ் – இயல் , இசை , நாடகம்

பாடலின் பொருள்

தமிழ்ச் சோலையில் பூ எடுத்து , இசையுடன் பாடி உலகம் புகழ வந்தாயோ ! தங்கப் பூ பதித்த தந்தத்தால் ஆன தொட்டிலில் செல்லமாய் உறங்க வந்த சேரநாட்டின் முத்தேனோ ! இல்லம் வந்தவரை இன்முகத்தோடு வரவேற்று அறுசுவை உணவளிக்கும் சோழ நாட்டின் முக்கனியோ ! குளம் வெட்டி , அணை கட்டிக் குடிமக்களின் பசியைப் போக்கும் பாண்டி நாட்டின் முத்தமிழோ ! கண்ணே கண்மணியே கண்மூடி உறங்குவாயாக !

நூல் வெளி

தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று தால் என்பதற்கு நாக்கு என்று பொருள் . நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு ( தால் + ஆட்டு ) என்று பெயர்பெற்றது . குழந்தையின் அழுகையை நிறுத்தவும் தூங்க வைக்கவும் இனிய ஓசையுடன் பாடும் பாடல் தாலாட்டு .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

‘ பாட்டிசைத்து ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) பாட்டி + சைத்து ஆ ) பாட்டி + இசைத்து இ ) பாட்டு + இசைத்து ஈ ) பாட்டு + சைத்து

‘ கண்ணுறங்கு ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __

அ ) கண் + உறங்கு ஆ ) கண்ணு + உறங்கு ஈ ) கண்ணு + றங்கு இ ) கண் + றங்கு

வாழை + இலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்___

 அ ) வாழையிலை ஆ ) வாழைஇலை இ ) வாழைலை ஈ ) வாழிலை

கை + அமர்த்தி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ___

அ ) கைமர்த்தி ஆ ) கைஅமர்த்தி இ ) கையமர்த்தி ஈ ) கையைமர்த்தி

 உதித்த என்ற சொல்லிற்குரிய எதிர்ச்சொல்  

அ ) மறைந்த ஆ ) நிறைந்த இ ) குறைந்த ஈ ) தோன்றிய

நானிலம் படைத்தவன்

காடுகளில் வாழ்ந்த மனிதன் அக்காடுகளைத் திருத்தி விளைநிலங்களை உருவாக்கினான் . பயிர்களை விளைவித்தான் . ஊர்களை உருவாக்கிக் கூடி வாழ்ந்தான் . பல்வகைத் தொழில்கள் மூலம் தன் வாழ்வை மேம்படுத்திக் கொண்டான் . தொழிலும் வணிகமும் அவன் வாழ்க்கையை உயர்த்தின . தமிழரின் வணிக மேன்மையை அறிவோம் வாருங்கள் .

கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை

மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி

ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற

பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான் ,

மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல்

நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன் ,

ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான்

சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான்

முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள்

எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற் ,

பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால்

கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான் ,

அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள்

அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்

– முடியரசன்

சொல்லும் பொருளும்

மல்லெடுத்த – வலிமைபெற்ற

சமர் – போர்

நல்கும் – தரும்

கழனி – வயல்

மறம் – வீரம்

எக்களிப்பு – பெருமகிழ்ச்சி

கலம் – கப்பல்

ஆழி – கடல்

பாடலின் பொருள்

தமிழன் கற்களும் முட்களும் நிறைந்திருந்த பெரிய நிலப்பரப்பைத் திருத்திப் பண்படுத்தினான் . தனது உடல் வலிமையால் வளத்தைப் பெருக்கினான் . ஊர் , நகரம் , நாடு ஆகியவற்றை உருவாக்கி வாழும் பெருமையைப் பெற்றான் . முல்லை , மருதம் , குறிஞ்சி , நெய்தல் என நிலத்தை நால்வகைப்படுத்திய நாகரிக மனிதன் அவன் .

பழந்தமிழன் ஆழமான கடல்களைக் கடந்து பயணம் செய்தான் . அச்சம் தரும் போர்களிலும் எளிதாக வெற்றி கண்டான் . பனிசூழ்ந்த இமயமலையில் தன் வெற்றிக் கொடியை நாட்டினான் . ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான் . ஏலம் , மிளகு ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள்தோறும் அனுப்பி வணிகம் செய்தான் . கப்பலில் உலகை வலம் வந்தான் . அவன் எதற்கும் அஞ்சாதவன் . ஆனால் , சான்றோர்கள் அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுபவன் .

நூல் வெளி

முடியரசனின் இயற்பெயர் துரைராசு , பூங்கொடி , வீரகாவியம் , காவியப்பாவை முதலிய நூல்களை எழுதியுள்ளார் . திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் . இப்பாடல் புதியதொரு விதி செய்வோம் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது .

வெள்ளிப் பனிமலையின் மீதுஉலாவுவோம் – அடி

மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்

கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம்

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்

சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு

சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம் !

– பாரதியார்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ___

அ ) மகிழ்ச்சி ஆ ) துன்பம் இ ) வீரம் ஈ ) அழுகை

கல்லெடுத்து என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) கல் + அடுத்து ஆ ) கல் + எடுத்து இ ) கல் + லடுத்து ஈ ) கல் + லெடுத்து

நானிலம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) நா + னிலம் ஆ ) நான்கு + நிலம் இ ) நா + நிலம் ஈ ) நான் + நிலம்

 நாடு + என்ற என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) நாடென்ற ஆ ) நாடன்ற இ ) நாடுஎன்ற ஈ ) நாடுஅன்ற

கலம் + ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) கலம்ஏறி கலமறி இ ) கலன்ஏறி ஈ ) கலமேறி

கடலோடு விளையாடு

பாடல் மனிதர்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது . அசதியைப் போக்குகிறது . உழைக்கும் தொழிலாளர்கள் களைப்புத் தெரியாமல் இருக்கப் பாடி மகிழ்கிறார்கள் . வாட்டும் வெயிலையும் தாக்கும் புயலையும் தன் கூட்டாளியாக்கிக் கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீனவர்கள் . அம்மீனவர்களின் பாடலைக் கேட்போம் வாருங்கள் .

விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா

அடிக்கும்அலை நம்தோழன் – ஐலசா

அருமைமேகம் நமதுகுடை – ஐலசா

வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா

விண்ணின்இடி காணும்கூத்து – ஜலசா

பாயும்புயல் நம்ஊஞ்சல் – ஜலசா

பனிமூட்டம் உடல்போர்வை – ஐலசா

காயும்கதிர்ச் சுடர்கூரை – ஐலசா

கட்டுமரம் வாழும்வீடு – ஐலசா

மின்னல்வரி அரிச்சுவடி – ஜலசா

பிடிக்கும்மீன்கள் நம்பொருள்கள் – ஐலசா

முழுநிலவே கண்ணாடி – ஐலசா

மூச்சடக்கும் நீச்சல் யோகம் – ஐலசா

தொழும்தலைவன் பெருவானம் – ஐலசா

துணிவோடு தொழில்செய்வோம் – ஐலசா

சொல்லும் பொருளும்

கதிர்ச்சுடர் – கதிரவனின் ஒளி

மின்னல்வரி – மின்னல் கோடு

அரிச்சுவடி – அகரவரிசை எழுத்துகள்

பாடலின் பொருள்

மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள் . அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள் ; விரிந்த கடலே பள்ளிக்கூடம் ; கடல் அலையே தோழன் ; மேகமே குடை ; வண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை ; விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து ; சீறிவரும் புயலே விளையாடும் ஊஞ்சல் ; பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை ; அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை ; கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு ; மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம் ; வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம் ; முழு நிலவுதான் கண்ணாடி ; மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம் ; வானமே அவர்கள் வணங்கும் தலைவன் . இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர் .

தெரிந்து தெளிவோம்

நெய்தல் திணை

நிலம் : கடலும் கடல் சார்ந்த இடமும்

மக்கள் : பரதவர் , பரத்தியர்

தொழில் : மீன் பிடித்தல் , உப்பு விளைவித்தல்

பூ : தாழம்பூ

நூல் வெளி

உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும் . காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர் . ஏற்றப்பாட்டு , ஓடப்பாட்டு முதலான தொழில்பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள் , தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும் . இப்பாடல் சு . சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது .

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) கதிர்ச் + சுடர் ஆ ) கதிரின் + சுடர் இ ) கதிரவன் + சுடர் ஈ ) கதிர் + சுடர்

மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ ) மூச்சு + அடக்கி ஆ ) மூச் + அடக்கி இ ) மூச் + சடக்கி ஈ ) மூச்சை + அடக்கி

பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) பெருமைவனம் ஆ ) பெருவானம் இ ) பெருமானம் ஈ ) பேர்வானம்

அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ ) அடிக்குமலை ஆ ) அடிக்கும் அலை இ ) அடிக்கிலை ஈ ) அடியலை

TNPSC TAMIL STUDY MATERIAL

10 std tamil study material

அன்னை மொழியே 

இரட்டுற மொழிதல் 

காற்றே வா

முல்லைப்பாட்டு 

காசிக்காண்டம் 

மலைபடுகடாம் 

பெருமாள் திருமொழி 

பரிபாடல் 

நீதி வெண்பா 

திருவிளையாடற்புராணம் 

பூத்தொடுத்தல் 

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் கம்பராமாயணம் 

ஏர் புதிதா ? 

மெய்க்கீர்த்தி 

சிலப்பதிகாரம் 

ஞானம் 

காலக்கணிதம் 

சித்தாளு 

தேம்பாவணி 

9 std tamil study material

தமிழோவியம் 

தமிழ்விடு தூது 

பட்டமரம் 

பெரியபுராணம் 

புறநானூறு

மணிமேகலை 

ஓ , என் சமகாலத் தோழர்களே

உயிர்வகை 

குடும்ப விளக்கு 

சிறுபஞ்சமூலம் 

இராவண காவியம்

நாச்சியார் திருமொழி 

சீவக சிந்தாமணி 

முத்தொள்ளாயிரம்

மதுரைக்காஞ்சி 

ஒளியின் அழைப்பு 

தாவோ தே ஜிங் 

யசோதர காவியம் 

அக்கறை 

குறுந்தொகை 

8 std tamil study material

தமிழ்மொழி வாழ்த்து 

தமிழ்மொழி மரபு 

ஓடை 

கோணக்காத்தும் பாட்டு 

நோயும் மருந்தும் 

வருமுன் காப்போம் 

கல்வி அழகே அழகு 

புத்தியைத் தீட்டு 

திருக்கேதாரம் 

பாடறிந்து ஒழுகுதல் 

வளம் பெருகுக 

மழைச்சோறு 

படை வேழம் 

விடுதலைத் திருநாள் 

ஒன்றே குலம் 

மெய்ஞ்ஞான ஒளி 

உயிர்க்குணங்கள் 

இளைய தோழனுக்கு

7 std tamil study material

எங்கள் தமிழ் 

ஒன்றல்ல இரண்டல்ல 

காடு 

புலிதங்கிய குகை 

கலங்கரை விளக்கம் 

இன்பத்தமிழ்க் கல்லி 

ஒரு வேண்டுகோள் 

விருந்தோம்பல் 

வயலும் வாழ்வும் 

புதுமை விளக்கு 

அறம் என்னும் கதிர் 

மலைப்பொழிவு  

6 std tamil study material

காணிநிலம் 

அறிவியல் ஆள்வோம் 

மூதுரை 

துன்பம் வெல்லும் கல்வி 

ஆசாரக் கோவை 

கண்மணியே கண்ணுறங்கு 

நானிலம் படைத்தவன் 

கடலோடு விளையாடு 

SHARE

Leave a Comment

Your email address will not be published.

%d bloggers like this: